கோத்தகிரி அருகே பரிதாபம் யானை தாக்கி பழங்குடியின கூலி தொழிலாளி பலி

3 months ago 16

கோத்தகிரி : நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட குஞ்சபனை வனக்கோட்டத்தில் கீழ் கூப்பு பழங்குடியின கிராமப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் அடிக்கடி காட்டு யானைகள் கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடி உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இங்கு உலா வந்த காட்டு யானை தாக்கி பழங்குடியின கூலி தொழிலாளி இறந்துள்ளார்.

நேற்று முன்தினம் செம்மனாரை பகுதியை சேர்ந்த சண்முகம் (38) என்பவர் கோழிக்கரை பகுதிக்கு வேலைக்காக வந்துள்ளார். அன்று இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் நேற்று காலை அவரது உறவினர்கள் சண்முகத்தை தேடி பார்த்துள்ளனர். அப்போது சண்முகம் காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த நிலையில் கீழ்கூப்பு வனப்பகுதியில் இருந்து செம்மனாரை செல்லும் சாலையில் அமைந்துள்ள வனப்பகுதியில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக வனத்துறையினர், போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. இதன்பேரில் வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது தாய் மாண்டேவிடம் உடனடி நிவாரண தொகையாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வனத்துறையினர் வழங்கினர். தொடர்ந்து வனத்துறையினர் கீழ்கூப்பு செட்டில்மென்ட், குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் வராதபடி, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கோத்தகிரி அருகே பரிதாபம் யானை தாக்கி பழங்குடியின கூலி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Read Entire Article