விழுப்புரம், ஜன. 8: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே இசிஆர் சாலையில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வாலிபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் ராயர் மகன் அப்பு (எ) ஜவகர் (24), சோதனைகுப்பத்தை சேர்ந்தவர் பகிர்முகமது மகன் அகமதுஹஸைன் (25). இவர்கள் கடந்த டிசம்பர் 7ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அசிங்கமாக திட்டி கத்தியுடன் சுற்றித் திரிந்துள்ளனர். தகவலறிந்த கோட்டக்குப்பம் காவல்நிலைய எஸ்.ஐ. சம்பத்குமார் விரைந்து சென்று அவர்களை பிடித்து விசாரித்தபோது பணி செய்ய விடாமல் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சம்பத்குமார் அங்கிருந்து உயிர் தப்பித்தார். இதையடுத்து கோட்டக்குப்பம் காவல்நிலைய போலீசார், அவர்கள் 2 பேரையும் பிடித்து கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து வாலிபர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் பழனி நேற்று அதற்கான உத்தரவை பிறப்பித்தார். தொடர்ந்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடமும் கோட்டக்குப்பம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை வழங்கினர்.
The post கோட்டக்குப்பம் அருகே இசிஆர் சாலையில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.