கோடையில் இறைவைப் பயிராக கம்பு சாகுபடி என்ற தலைப்பில் தருமபுரி உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் வி.குணசேகரன் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை இடம்பெறுகிறது.
பின்செய் நேர்த்தி
35 நாட்கள் வரை களையில்லாமல் இருந்தால் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பு உண்டு. எனவே நட்ட 30வது நாளில் ஒரு கைக்களை எடுக்கலாம் அல்லது நட்ட 3வது நாளில் அட்ரசின் 500 கிராம் களைக்கொல்லி தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
வளர்ச்சிப் பருவங்கள்
இளம் பயிர் 1-18 நாட்கள்
தூர் கட்டுதல் 19-35 நாட்கள்
பூக்கும் பருவம் 36-55 நாட்கள்
முதிர்ச்சிப் பருவம் 56-95 நாட்கள்
இறைவையில் நிலத்தின் தன்மைக்கேற்ப 8-10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் தேங்கக்கூடாது. தூர் கட்டும் தருணம், பூப்பிடிக்கும் தருணம் மற்றும் பால் பிடிக்கும் தருணங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பொதுவாக கம்புப் பயிரை அதிக பூச்சி நோய்கள் தாக்குவதில்லை. விவசாயிகள் மருந்தும் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் பின் பட்டத்தில் விதைக்கப்படும் கம்பில் அல்லது பருவம் தவறி விதைத்த கம்பில் பூச்சிநோய்கள் தாக்குகின்றது.முக்கியமாக குருத்து ஈ தாக்கினால் செடியின் நடுக்குருத்து தாக்கப்பட்டு உண்ணப்பட்டுவிடும். கதிர் பருவத்தில் இந்த பூச்சி தாக்கினால் கதிர் நசிந்து எலிவாலைப் போன்று நீண்டுவிடும். கதிர் ஈ தாக்கப்பட்ட மணிகள் சிறுத்து சுருங்கிவிடுகின்றன. மணிகளில் ஈக்களின் கூட்டுப்புழுக்களின் உறைகள் வெளிப்புறம் நீண்டு இருப்பதைக் காணலாம். கதிர் வாங்கும் சமயம் வேர்கள் வேர்ப்புழுக்களால் துண்டிக்கப்பட்டு செடிகள் வாடி காய்ந்துவிடும்.
நோய்களில் முக்கியமாக பசுங்கதிர் நோய் அதிக சேதம் விளைவிக்கும். முதலில் இலைகளின் பின்பகுதி சாம்பல் நிறமாகி பின் நார்போல் கிழிந்து காய்ந்து காணப்படும். தாக்கப்பட்ட கதிரின் ஒரு பகுதி மட்டுமோ அல்லது முழுவதுமாகவோ மணிகளுக்கு பதில் பச்சை நிறத்தில் நீண்ட குறுகிய இலைகள் போன்ற பகுதி காணப்படும். இதனைத் தடுக்க தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி எரித்துவிட வேண்டும். பூசணக்கொல்லி மூலம் விதைநேர்த்தி செய்வதின் மூலம் நோயைத் தடுக்கலாம்.
தேன்துளி நோய் தாக்கப்பட்ட செடிகளிலிருந்து பிசுபிசுப்பான தேன் போன்ற திரவம் கசிந்து கொண்டிருக்கும். இதில் பூச்சிகள் நிறைய இருக்கும். இதனால் விதைகள் கருமைநிறமாக மாறிவிடும். மழைக்காலங்களில் பூ பிடிக்காதவாறு பயிர் செய்ய வேண்டும். பூச்சிகளால் நோய் பரவுவதால் ஏதாவது பூச்சிக்கொல்லியினை தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தினால் நோயும் கட்டுப்படும். இதுதவிர இலைப்புள்ளி நோய் மற்றும் துருநோய் கம்பைத் தாக்கும்.பொதுவாக கம்புப்பயிரில் அதிகம் பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கைப் பூச்சி மருந்துகளான மூலிகை பூச்சி விரட்டி, மீன் அமிலம், பஞ்சகவ்யா, தசகவ்யா, அரப்பு மோர்க் கரைசல், டிரைக்கோடெர்மா, பவேரியா பேசியானா போன்றவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்தி பாதுகாப்பான நஞ்சற்ற கம்புத் தானியத்தை விளை விக்கலாம்.
அறுவடை
கம்புப் பயிர் 150 முதல் 200 செமீ உயரம் வரை ரகத்தைப் பொறுத்து வளரக்கூடியது. அதிக தூர் விடும் தன்மை கொண்டது. விதைத்த 5 முதல் 8 வது வாரத்திற்குள் முதல் கதிர் வெளிவரும். அதன்பின் பக்க கதிர்கள் வெளிவரும். கதிரின் நீளம் 15 முதல் 60 செமீ வரை இருக்கும். கதிரில் 1600 சிறு பூக்கள் இருக்கும். ராஜஸ்தான் கம்பின் நீளம் ஒரு மீட்டர் உயரம் வரை இருக்கும். கதிர் வெளிவந்த 2-3 தினங்களில் சூல்முடி வெளிவரும். மேலிருந்து கீழாக பூக்கள் பூக்கும். பூக்க ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் அனைத்துப் பூக்களும் பூக்கும். முதலில் பெண் பூக்கள்தான் பூக்கும். சூல்முடி வெளிவந்த பின்தான் மகரந்தப்பை வெளிவர ஆரம்பிக்கும். ஆண் மற்றும் பெண்பூக்கள் வெவ்வேறு சமயத்தில் பூப்பதால் அயல் மகரந்த சேர்க்கை முலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. கதிர் வெளிவந்த 6-8 நாட்களில் இனச்சேர்க்கை முடிந்து கரு வளர ஆரம்பிக்கும். பூக்கும் தருணத்தில் அதிக காற்று மழை இருந்தால் மணி பிடித்தல் பாதிக்கும். இனச்சேர்க்கை நடந்து 30-35 நாட்களில் தானியம் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு வரும்.மணிகள் நன்கு விளைந்த பின் அறுவடை செய்யலாம். கதிர்களை அறுவடை செய்து களத்தில் போட்டு காயவைக்க வேண்டும். பின் மாடு அல்லது டிராக்டர் கொண்டோ தானியங்களைப் பிரித்தெடுக்கலாம். தானியத்தை கதிரிலிருந்து பிரித்தெடுத்து நன்கு சுத்தம் செய்து காயவைத்து பின் சேமிக்கலாம். கம்புப் பயிரின் தட்டையை மாடுகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம்.
மகசூல் ஒரு ஏக்கருக்கு சாதா ரகங்களாக இருந்தால் 1500 கிலோ மகசூல் கிடைக்கும். வீரிய ரகங்களாக இருக்கும் பட்சத்தில் 2000-2500 கிலோ மகசூல் கிடைக்கும்.
The post கோடையில் கம்பு சாகுபடி… அதிக விளைச்சலுக்கு பயனுள்ள நுட்பங்கள்! appeared first on Dinakaran.