கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுக்கான அட்டவணையில் மாற்றம்: தொடக்கக் கல்வி இயக்குநரகம்

2 days ago 4

சென்னை: கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த சூழலில் தமிழகத்தில், நடுநிலைப் பள்ளிகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. இதனால், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுக்கான அட்டவணையில் மாற்றம்: தொடக்கக் கல்வி இயக்குநரகம் appeared first on Dinakaran.

Read Entire Article