
சென்னை,
தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. பகல் நேரங்களில் சூரியனின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க வீடு, அலுவலகங்களில் பெரும்பாலானோர் தஞ்சம் அடைகின்றனர். தவிர்க்கமுடியாத காரணத்துக்காக வெளியே வருபவர்களும் மரத்தின் நிழலிலும், மேம்பாலங்களின் கீழேயும், பஸ் நிறுத்தங்களிலும் என சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு பின்னர் செல்கின்றனர். வெயிலின் உஷ்ணம் கடுமையாக இருப்பதால் வீடுகளில் மின்விசிறிகள் ஓய்வின்றி இயங்குகின்றன. இதில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு மக்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், 'கோடைகால வெப்பத்தை தணிக்க மத்திய அரசு இலவசமாக 5 ஸ்டார் ஏ.சி. வழங்குகிறது. இதனை மாநில அரசின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தியே. மத்திய அரசு இப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது வதந்தி என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.