மேட்டுப்பாளையம்: கோடை கால விடுமுறை நாட்களில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி மற்றும் ஊட்டி முதல் மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் நேற்று முதல் வரும் ஜூலை 6ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வாரத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் என 2 நாட்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 184 பயணிகளுடன் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த சிறப்பு ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டி சென்றடையும். அதேபோல், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை வாரத்தில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 11.25 ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் இயக்கப்பட்ட சிறப்பு மலை ரயிலில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணித்து மகிழ்ந்தனர்.
The post கோடை விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் appeared first on Dinakaran.