ராமநாதபுரம்,ஏப்.25: கோடைக்காலம் என்பதால் ராமநாதபுரம், கடலாடி,சாயல்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதியில் மான்,மயில் உள்ளிட்ட பறவைகள், விலங்குகள் நலன் கருதி தண்ணீர் குட்டைகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம், திருப்புல்லாணி ஊரக பகுதிகள், சாயல்குடி பகுதியிலுள்ள நரிப்பையூர், ஒப்பிலான், ஏர்வாடி இதம்பாடல் போன்ற கடற்கரை காடுகளிலும், கடலாடி, கடுகுசந்தை, மீனங்குடி, ஆப்பனூர், கிடாத்திருக்கை, கோவிலாங்குளம், கொம்பூதி, முதுகுளத்தூர் பேரையூர் போன்ற 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளிலும், மேலச்செல்வனூர், சித்திரங்குடி, கீழகாஞ்சிரங்குளம் உள்ளிட்ட பறவைகள் சரணாலயம், மலட்டாறு ஆற்று படுகை, ஓடை காடுகளிலும் அதிகளவில் மான்களும், மயில்கள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகிறது.
இதில் அபூர்வமான வெள்ளை தோகையுடைய மயில்களும் அதிகமாக வாழ்ந்து வருகிறது. மழை காலத்தில் ஆறு, கண்மாய், ஊரணி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது. அதனை மயில், மான் உள்ளிட்ட பறவைகள், விலங்குகள் குடித்து வந்தது. தற்போது கோடைக்காலம் என்பதால் கடும் வெயிலால் வறட்சி ஏற்பட்டு, தண்ணீர் வற்றி வருகிறது. பெரும்பாலான ஊரணி,கண்மாய் போன்ற நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு விட்டது. இதனால் சாலையோர பகுதிகளில் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் இருந்து கசிந்து பெருகி கிடக்கும் நீர், ஊர்பகுதிகளில் உள்ள ஊரணிகளில் பெருகி கிடக்கும் தண்ணீரை குடிப்பதற்காக மான், மயில்கள் கிராம பகுதிக்குள் வருகிறது. அப்போது ஆட்கள் நடமாட்டம், நாய்கள் தொல்லையால் அவை தண்ணீர் குடிக்க முடியாமல் திரும்பி செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் வசதியில்லாத கிராம காட்டு பகுதியில் மான், மயில்கள் தண்ணீரின்றி, தாகத்தால் இறந்து போகும் அபாயம் உள்ளது. மேலும் தண்ணீரை தேடி கிராம பகுதிகளுக்குள் சில மான்கள் வரும்போது, நாய்கள் கடித்து இறப்பது, சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிப்பட்டு பலியாவது நிகழ்கிறது. எனவே தேசிய பறவையான மயில் மற்றும் மான்களின் தாகம் தீர்க்க ராமநாதபுரம், திருப்புல்லாணி மற்றும் கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் ஆற்று படுகை, கண்மாய்களில் தற்காலிக குட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் நிரந்தர தீர்வாக தரைமட்ட திறந்தவெளி குடிநீர் தொட்டிகளை அமைத்து, அதில் கோடை காலத்தில் தண்ணீரை பெருக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கோடை வறட்சியால் பறவைகளுக்கு தண்ணீர் குட்டை அமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.