கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வரவேற்க வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஊட்டி

7 hours ago 1

ஊட்டி : கோடை விழாவை காண ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக நகரில் பல்வேறு இடங்களிலும் வண்ண வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜொலித்து காட்சியளித்தது.

சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக நீலகிரி விளங்கி வருகிறது. கோடை விடுமுறையை கொண்டாடவும், சமவெளி பகுதிகளில் கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரியை முற்றுகையிடுவது வாடிக்கை.

இந்நிலையில் பள்ளிகளில் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்தே ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட துவங்கியது. சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டெரிக்க துவங்கி உள்ளதால் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிய துவங்கியுள்ளனர். அதற்கேற்ப அவ்வப்பொது மழை பெய்வதால் குளு குளு ரம்மியமான காலநிலையும் நிலவி வருகிறது.

இதன் காரணமாக ஊட்டி நகரில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் உள்ள தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம் போன்ற சுற்றுலா தலங்களிலும் கூட்டம் காணப்படுகிறது. ஊட்டி வர இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளதால், இ-பாஸ் விண்ணப்பித்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் நடப்பு ஆண்டிற்கான கோடை விழா துவங்கியுள்ளது‌.

வரும் வாரங்களில் மாவட்ட தலைநகரமான ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது. இதற்காக இப்பூங்காக்கள் தயராகி வருகின்றன. இக்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு மட்டும் செல்லாமல் ஊட்டி நகரில் உலா வந்து, நீலகிரிக்கே உரித்தான நீலகிரி தைலம், வர்க்கி, ஹோம்மேட் சாக்லேட் போன்றவைகளையும் வாங்கி செல்வார்கள் என்பதால் கோடை விழாவை வரவேற்க ஊட்டி நகரம் தயாராகி உள்ளது. ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஆதாம் நீருற்று, பூங்கா சாலையோரங்களில் உள்ள மரங்கள் உள்ளிட்டவைகள் வண்ண வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கிறது.

The post கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வரவேற்க வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஊட்டி appeared first on Dinakaran.

Read Entire Article