ஊட்டி: கோடை சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் நாற்றுகள் உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில், தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்கும் வகையில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இதற்காக ஆண்டு தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாற்று உற்பத்தி செய்யப்படும். நாற்றுகள் உற்பத்தியானவுடன் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடவு பணிகள் துவங்கும்.
பின், இந்த மலர் செடிகள், ரகம் வாரியாக பிரித்து அவை பூக்கும் காலத்திற்கு ஏற்றவாறு மார்ச் மாதம் வரை நடவு செய்யப்படும். இம்முறை, சென்னையில் கடந்த மாதம் மலர் காட்சி நடத்தப்பட்டது. இதற்காக தாவரவியல் பூங்காவில் பல லட்சம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டது. இதனால், கோடை சீசனுக்கான நாற்று உற்பத்தி மற்றும் நடவு பணிகள் தாமதமானது. இந்நிலையில், பூங்காவில் உள்ள நர்சரி பாத்திகளில் நாற்று உற்பத்தியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாவரவியல் பூங்கா நர்சரியில் தொழிலாளர்கள் விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாற்று உற்பத்தியான உடன் அவைகள் பூங்காவில் உள்ள பல்வேறு பாத்திகளிலும், ஆயிரகணக்கான தொட்டிகளிலும் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட உள்ளது.
The post கோடை சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் நாற்றுகள் உற்பத்தி appeared first on Dinakaran.