கோடை காலம் முடியும் வரை குடிநீர், நீர் மோர் பந்தல்: நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

1 day ago 2

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டு மக்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுள்ள அ.தி.மு.க., இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு மக்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகின்றது.

அதேபோல், அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி - மக்கள் பணிகளை சிறப்புடன் ஆற்றி வருவதை நான் நன்கு அறிவேன். தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிப்பது வழக்கம்.

அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் இப்பொழுதே தொடங்கி விட்டதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கட்சியினரும், தொண்டர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும்.

பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்படும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை கட்சி நிர்வாகிகள், காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் பராமரித்திட வேண்டும்.

கட்சி சார்பில் ஆங்காங்கே அமைக்கப்படும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் அவ்வப்போது மேற்பார்வையிட்டு, கோடை காலம் முடியும் வரை அவை முறையாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read Entire Article