கோடை காலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில்; தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்: மழை தாக்கம் குறைந்தது; வானிலை ஆய்வு மையம் தகவல்

2 weeks ago 4

சென்னை: கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வரும் 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், மழை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஜனவரி மாத இறுதியிலேயே வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதாவது, கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் நாட்கள் உள்ளது. ஆனாலும் மழை குறைந்து விட்ட நிலையில், இந்தாண்டு தற்போது முதலே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் சுட்டெரிக்க தொடங்கி விட்டது.

அதிகாலையில் மட்டும் லேசான பனிமூட்டம் காணப்படுகிறது. பகல் வேளையில் கோடை காலத்தில் இருப்பது போன்று வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதன் பின்பு மழைக்கான அறிகுறிகள் குறைந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே தொடரும் என்று அறிவித்துள்ளது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்று மட்டும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனி மூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 4ம்தேதி முதல் 8ம்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post கோடை காலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில்; தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்: மழை தாக்கம் குறைந்தது; வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article