கொள்ளிடம் அருகே தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் 200 ஏக்கர்

3 months ago 22

* கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்
* பாசன விவசாயிகள் கோரிக்கை

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே கடைமடை பகுதிகளில் தண்ணீர் இன்றி மேடான பகுதி நிலங்கள் வறண்டு கிடப்பதால் பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்கால்களாக இருந்து வருவது பிரதான புதுமண்ணியாறு, மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால் ஆகும். இந்த இரு பிரதான வாய்க்கால்களிலும் தண்ணீர் சீராக பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர்வாராத காரணத்தால் பாசனம் பெற முடியாத நிலையும் இருந்து வருகிறது. இந்நிலையில் கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வரும் மகேந்திரப்பள்ளி, காட்டூர், சுப்பராயபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் தெற்கு ராஜன் பாசன வாய்க்காலின் கடை கோடி பகுதியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கி வருகிறது.

அப்பகுதியில் தெற்கு ராஜன் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்கால்கள் மூலம் சென்று பாசனத்திற்கு தண்ணீர் அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சற்று மேடான பகுதியில் உள்ள நிலங்கள் பாசன வசதி இல்லாமல் நேரடி விதைப்பு செய்த நெற்பயிர் காய்ந்து நிலமும் வறண்டு காணப்படுகிறது. கிளை வாய்க்கால்கள் மூலம் சாதாரணமாக பாசனத்திற்கு செல்லும் தண்ணீர் எளிதில் மேடான பகுதியில் உள்ள நிலங்களுக்கு சென்று சேர முடியாத நிலை இருந்து வருகிறது. தற்போது முறை வைத்து பாசனத்திற்கு கடை கோடி பகுதிக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வாரத்தில் திங்கட்கிழமை முறை வைத்து கடை கோடி கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், உரிய நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் சென்று சேராமல் இருப்பதே அப்பகுதியில் மேடான நிலப் பகுதிகள் வறண்டு காணப்படுவதற்கு காரணமாக இருந்து வருகின்றன என்று விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வட ரங்கம் பகுதியில் உள்ள கதவணையிலிருந்து தெற்கு ராஜன் வாய்க்கால் வழியே முறை பாசனம் மூலம் வழங்கப்படும் தண்ணீர் குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு வழங்கினால் கடைமடை பகுதியில் உள்ள கிராம நிலங்கள் முழுமையும் பாசன வசதி பெறும். ஆனால் வடரங்கம் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு கதவணை வழிய தண்ணீர் திறந்து விடாமல் குறைந்த அளவுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் கடைமடை பகுதியில் உள்ள மேடான நிலங்களுக்கு தண்ணீர் முறை வைத்தும் வந்து சேரவில்லை. இதனால் நேரடி விதைப்பு செய்த சுமார் 200 ஏக்கர் நிலங்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

எனவே தற்போதுள்ள நிலையில் வறண்டு கிடக்கும் நிலங்களை கருத்தில் கொண்டு காய்ந்து கொண்டிருக்கும் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிரை காப்பாற்றும் வகையில் பருவ மழை தொடங்கும் காலம் வரை வழக்கத்தை விட பாசனத்திற்கு தெற்கு ராஜன் வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறந்து விடுவதுடன் கடைமடை பகுதிக்கும் அனைத்து மேடான பகுதி நிலங்களுக்கும் தண்ணீர் சென்று சேருகிறதா என்பதனை கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மகேந்திரபள்ளி விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் அருகே தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் 200 ஏக்கர் appeared first on Dinakaran.

Read Entire Article