கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேரில் ஆய்வு 600 தூய்மைப்பணியாளர்களுக்கு பிரியாணியுடன் மதிய விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிமாறி அமர்ந்து சாப்பிட்டார்

1 month ago 4

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, 600 தூய்மைப்பணியாளர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ததையொட்டி, கொளத்தூர், வீனஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நிலையத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகள், ரெட்டேரியை மேம்படுத்தும் பணிகள், தணிகாசலம் உபரிநீர் கால்வாய் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாலாஜி நகரில் நடந்து வரும் மருத்துவ முகாமை பார்வையிட்டு, கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் காமராசர் சத்திரத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, மதிய உணவினை பரிமாறி, அவர்களுடன் சாப்பிட்டார். நீர்வளத்துறை சார்பில் ரெட்டேரியை ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி, அதன் கொள்ளளவையும் உயர்த்தி, 3.5 கி.மீ. சுற்றுச்சுவர் கட்டும் பணி மற்றும் ரெட்டேரி தெற்கு பகுதியில் உள்ள மதகு சீரமைக்கும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். குமரன் நகர் சாலையில் உள்ள பாலாஜி நகரில் மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் உள்ள தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயில், கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் ரூ.91 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில், 600 தூய்மைப்பணியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரிசி, ரெயின் கோட், புடவை, பெட்ஷீட், ரஸ்க், பால் பவுடர், துவரம் பருப்பு, மிளகாய்த்தூள், சமையல் எண்ணெய், லுங்கி உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை வழங்கி, தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவை முதல்வரே பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* முதல்வருக்கு நன்றி தெரிவித்த மக்கள்
அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்றிட ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் வெளியேற்றும் நிலையத்தின் மூலம், மழைநீர் வெளியேற்றப்பட்டு வரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் முதல்வரிடம் நேரடியாக பேசி “மழைநீர் தேங்காமல், பாதிப்பு ஏதும் ஏற்படாமல் சிறப்பாக நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி” என தெரிவித்தனர்.

The post கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேரில் ஆய்வு 600 தூய்மைப்பணியாளர்களுக்கு பிரியாணியுடன் மதிய விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிமாறி அமர்ந்து சாப்பிட்டார் appeared first on Dinakaran.

Read Entire Article