
நெல்லை,
நெல்லை மாவட்டம், செங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து (வயது 28) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேர்மன் மகன் இசக்கிதாஸ் (வயது 27) என்பவருக்கும் இடையே கடந்த 2017ம் ஆண்டு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 2017 மார்ச் 19ம் தேதி மாரிமுத்து செங்குளம் வடக்கு தெரு பாலர்வாடி அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த இசக்கிதாஸ், மாரிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து மாரிமுத்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் முன்னீர்பள்ளம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இசக்கிதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (18.3.2025) இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அமிர்தவேலு தீர்ப்பளித்தார். அப்போது குற்றவாளி இசக்கிதாஸ்க்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த சேரன்மகாதேவி டி.எஸ்.பி. சத்யராஜ் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கொலை முயற்சி போன்ற முக்கிய வழக்குகளின் விசாரணைகளை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களும் நேரடியாக கண்காணிக்கின்றனர். வழக்குகளின் விசாரணையின் போது சாட்சிகளுக்கு முழு அளவில் பாதுகாப்பளித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
காவல்துறையின் இந்த நடவடிக்கையால் 2025ம் ஆண்டு மட்டும் இதுவரை 6 கொலை முயற்சி வழக்குகளில் 7 குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.