
பெங்களூரு,
கர்நாடகத்தில் உள்ள ஹாசன், சிக்கமகளூரு மற்றும் சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் 27 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணமாக இருக்குமோ? என்று மக்களிடையே அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
இது குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அவசர கதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது கூட மாரடைப்பால் மரணம் அடைவதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது" என்றார்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றிய கருத்துக்கு சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அஸ்வத் நாராயணன் கூறுகையில், "லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய தடுப்பூசியின் செயல்திறன் பற்றி, எந்தவொரு அறிவியல் ரீதியான அடிப்படை ஆதாரத்தையும் காட்டாமல் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். தவறான தகவல்களை பரப்பியதற்காக மாநில மக்களிடம் முதல்-மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.