கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சென்னை-ஜெட்டாவுக்கு மீண்டும் விமான சேவை: 4 ஆண்டுக்கு பிறகு தொடக்கம்

3 months ago 21

சென்னை: கொரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- ஜெட்டா- சென்னை இடையிலான நேரடி விமான சேவைகள், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் இயங்க தொடங்கியது. சவுதி அரேபியா நாட்டிலுள்ள ஜெட்டா நகருக்கு, சென்னையில் இருந்து நேரடி விமான சேவைகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின்பு, கடந்த 2020 மார்ச் மாதத்துடன், சென்னை -ஜெட்டா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் இஸ்லாமிய மக்களின் புனித ஸ்தலமான மெக்கா, மதினாவுக்கு ஏராளமான பயணிகள், ஆண்டு முழுவதும் சென்று கொண்டிருப்பதால் சென்னை- ஜெட்டா- சென்னை இடையே, நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னை- ஜெட்டா- சென்னை விமான சேவையை நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது.

முதல் நாளாகிய புதன்கிழமை, இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு ஜெட்டா நகரில் இருந்து 132 பயணிகளுடன் புறப்பட்ட சவுதியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மாலை 5.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது. பின்பு அதே விமானம், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 222 பயணிகளுடன் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது. வாரத்தில் திங்கள், புதன் ஆகிய இரு தினங்கள் நேரடி விமான சேவை, சென்னையிலிருந்து ஜெட்டா நகருக்கு இயக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பின்பு, மீண்டும் விமான சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சென்னை-ஜெட்டாவுக்கு மீண்டும் விமான சேவை: 4 ஆண்டுக்கு பிறகு தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article