கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

1 month ago 8

சென்னை: கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய காலத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் 2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் 50 சதவீத பயணிகளுடனும், 2021 அக்டோபர் முதல் நூறு சதவீத பயணிகளுடனும் பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இருப்பினும் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டாததால் 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரையிலான ஐந்து காலாண்டுகளுக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை என அறிக்கை அளித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அந்த காலகட்டத்தில் சாலை வரி வசூலிக்க கூடாது எனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வாகனங்கள் 50 சதவீத பயணிகளுடனும், 100 சதவீத பயணிகளுடனும் இயக்க அனுமதித்துள்ளதாக கூறி, வாகன இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்த அறிக்கையை நிராகரித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கொரோனா காலத்தில் பேருந்துகளை இயக்காததால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் இழப்பை சந்தித்துள்ளனர். 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை ஆம்னி பேருந்துகள் பொது சாலையில் இயக்கப்படவில்லை என்பதால், அந்த பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது. 2021 அக்டோபர் முதல் 2022 டிசம்பர் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து ஆம்னி பேருந்துகள் சங்கம் அளித்த அறிக்கையை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

The post கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article