தண்டையார்பேட்டை : கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு கடத்த இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசு ரேஷன் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மாநில விலையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. இவை உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இலவசமாக வழங்கப்படுகிற அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ஒரு கும்பல் வெளிமாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கொருக்குப்பேட்டை ரயில்நிலையத்தில் ரயில்வே போலீசார் ரோந்து சென்றபோது நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 11 மூட்டையில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்த நிலையில் போலீசாரை பார்த்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். மேலும் இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை அம்பத்தூர் பகுதியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்று முன்தினம் இதேபோல் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 2வது நாளாக நடவடிக்கை appeared first on Dinakaran.