கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டனில் அதிரடி அரையிறுதியில் இந்திய வீரர் கிரண்: தாய்லாந்து வீரருடன் இன்று மோதல்

2 months ago 10

இக்சான் சிட்டி: தென் கொரியாவின் இக்சான் சிட்டியில் நடைபெற்று வரும் கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் கோப்பைக்கான போட்டியில் நேற்று இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் டகுமா ஒபயாசியை அபாரமாக வென்று அரையிறுதியில் நுழைந்தார். பேட்மின்டன் தர வரிசையில் 41ம் இடத்தில் உள்ள கிரண் ஜார்ஜ் (24), உலகளவில் 34ம் இடத்தில் உள்ள டகுமா ஒபயாசியை நேற்றைய காலிறுதியில் எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் துவக்கம் முதலே கிரணின் கையே ஓங்கி இருந்தது. போட்டி துவங்கிய சில நிமிடங்களில் 5-1 என்ற புள்ளிக் கணக்கில் ஆதிக்கம் செலுத்திய கிரண், 21-14 புள்ளிக்கணக்கில் முதல் செட்டை எளிதாக கைப்பற்றினார்.  இரண்டாம் சுற்றில் டகுமா சிறிது சோதனை தந்தபோதும், அந்த செட்டையும், 21-16 என்ற புள்ளி கணக்கில் வென்று அரையிறுதியில் நுழைந்தார் கிரண்.

முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சீனாவை சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீரரான சீ யு ஜென்னை வென்ற கிரண், காலிறுதியில் நுழைந்தார். இன்று நடக்கும் அரை இறுதிப் போட்டியில், பாரீசில் வெள்ளிப்பதக்கம் வென்ற தாய்லாந்து வீரர் குன்லாவுட் விடிட்சனை கிரண் எதிர்கொள்வார்.

இதற்கு முன், கிரணும் குன்லாவுட்டும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இந்தாண்டு இந்தோனேஷியாவில் நடந்த போட்டியில் கிரணை வென்றார் குன்லாவுட். அதேசமயம், 2017ல் நடந்த மலேஷியா சர்வதேச பேட்மின்டன் போட்டியில் குன்லாவுட்டை கிரண் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டனில் அதிரடி அரையிறுதியில் இந்திய வீரர் கிரண்: தாய்லாந்து வீரருடன் இன்று மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article