கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் வலம் வரும் அரிய வகை ‘லங்கூர்’ குரங்குகள்: உணவு, தண்ணீருக்காக இடம் பெயர்வு

4 weeks ago 6


* வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனப்பகுதியை விட்டு உணவு, தண்ணீருக்காக மலைச்சாலைகளுக்கு இடம்பெயர்ந்து உலா வரும் அரிய வகை ‘லங்கூர்’ குரங்குகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதி 60 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இங்கு அரிய வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் வத்தலக்குண்டு மலைச்சாலை வழியாக வருகின்றனர். உள்ளூர் பொதுமக்களும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வத்தலக்குண்டு மலைச்சாலையின் அடிவாரப் பகுதியாக உள்ள டம்டம் பாறைப் பகுதியில் அரிய வகை லங்கூர் குரங்குகள் கடந்த சில மாதங்களாக உலா வருகின்றன.

இவைகள் கூட்டம், கூட்டமாக சாலையோரங்கள், தடுப்புச்சுவர்களில் உட்கார்ந்து முகாமிடுகின்றன. கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் சென்றவாறு படம் பிடித்து மகிழ்கின்றனர். சிலர் வாகனத்தை நிறுத்தி தின்பண்டம் கொடுக்கின்றனர். குரங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல, கொடைக்கானலுக்கு செல்லும் பழநி மலைச்சாலையிலும் லங்கூர் வகை குரங்குகள் வலம் வருகின்றன. எனவே, வனத்துறையினர் அரிய வகை லங்கூர் குரங்குகளின் இடம்பெயர்வை தடுக்க, வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். மேலும், மலைச்சாலையில் மிதமான வேகத்தில் வாகங்களை ஓட்டுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலைகளை உண்ணுபவை
இந்தியாவில் 10 வகையான லங்கூர் குரங்குகள் உள்ளன. இவைகள் இலைகள், பழுக்காத பழங்கள், பட்டை மற்றும் பூக்களை உண்ணுபவையாகும். இவைகள் தனித்துவம் மிக்க வனவிலங்குகளாக திகழ்கின்றன. இவைகளின் வயிறு பல அறைகளை கொண்டுள்ளது. கடினமான தாவரப் பொருட்களை உண்டால் ஓய்வு நேரங்களில் ஜீரணிக்க வயிற்றில் உள்ள அறைகள் உதவுகின்றன. பசுமையான காடுகள், மூங்கில் திட்டுகள், மற்றும் தேயிலை தோட்டங்களில் வசிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகமான காணப்படும். பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இவைகளின் வாழ்விடங்கள் உயிரியல் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகளாக உள்ளன.

The post கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் வலம் வரும் அரிய வகை ‘லங்கூர்’ குரங்குகள்: உணவு, தண்ணீருக்காக இடம் பெயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article