
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதிவாரத்தில் கோடைவிழா, மலர்கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும்நிலையில் பிரையண்ட்பூங்காவில் மலர்கள் பூத்துக்குலுங்க துவங்கிவிட்டது.
இதனை சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். பத்து நாட்கள் நடைபெறும் கோடைவிழாவில் படகு போட்டி, மீன்பிடித்தல் போட்டி, விளையாட்டுப்போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து துறையினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
கொடைக்கானலில் தற்போது இதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் கடந்த சில தினங்களாக சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி கோடைவிழா மலர் கண்காட்சி நிறைவுபெற்றபிறகு, இதன் தொடர்ச்சியாக கொடைக்கானலில் கோடைவிழா, மலர்கண்காட்சிக்கான தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இனி இரவு 7 மணி வரை சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், பார்வையாளர்கள் அனுமதி நேரம், மாலை 6 மணிக்கு பதில், இனி இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.