கொடைக்கானல் : கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நகராட்சி சார்பில் நடந்த தூய்மை பணியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 25 டன் குப்பைகள், களைச் செடிகள், 5 டன் மதுபாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த ஏரியில் படகு சவாரி செய்வதை மிகவும் விரும்புவர். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி, தற்போது கொடைக்கானல் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 3 மாதங்களாக பல லட்சம் ரூபாய் செலவில் ஏரியில் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஏரியில் படகுகள் மூலம் குப்பைகள் மற்றும் களைச்செடிகள் தூர்வாரப்படுகின்றன. கரையில் வளர்ந்திருந்த புதர் செடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.இதுகுறித்து நகராட்சி பொறியாளர் (பொ) செல்லத்துரை கூறுகையில், ‘‘40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், படகுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பணியில் இதுவரை 25 டன் குப்பைகள், களைச்செடிகள் மற்றும் 5 டன் மது பாட்டில்கள் ஏரியில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. தற்போது தூய்மைப் பணி விரைந்து நடந்து வருகிறது.
அடுத்த ஒரு மாதத்திற்குள் பணி நிறைவடைந்து விடும். ஏரிக்கரையில் குப்பைகள் வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.கொடைக்கானல் நகருக்கு அழகு சேர்க்கும் நட்சத்திர ஏரியில் டன் கணக்கில் குப்பைகளும், மதுபாட்டில்களும் அகற்றிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post கொடைக்கானல் ஏரியில் முப்பது டன் குப்பைகள்,மது பாட்டில்கள் அகற்றம் appeared first on Dinakaran.