
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்பாபு. எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தற்காலிக அமரர் ஊர்தி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவராஜ் கடனாக சரத்பாபுவிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். இந்த நிலையில் கொடுத்த கடனை சரத்பாபு திருப்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சரத்பாபு அவரது வீட்டின் அருகே சாலையோரமாக நின்று அவரது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சிவராஜ் காரில் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சரத்பாபுவை கொலை செய்யும் நோக்கத்தில் சிவராஜ் காரை அதிவேகமாக இயக்கி அவர் மீது மோதினார்.
இதில் பலத்த காயமடைந்த சரத்பாபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த படாளம் போலீசார் சிவராஜை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.