கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டதால் மின்சாரம் பாய்ச்சி கணவரை கொல்ல முயன்ற மனைவி: சிவகங்கையில் பரபரப்பு

8 hours ago 2

சிவகங்கை: சிவகங்கை அருகே, செலவுக்கு கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டதால், கணவர் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயன்ற மனைவி பயத்தில் விஷம் குடித்தார். கணவன், மனைவி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிவகங்கை அருகே செங்குளிபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி கீதா (33). வெளிநாட்டில் இருந்து சுரேஷ்குமார், மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார். சமீபத்தில் சுரேஷ்குமார் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அப்போது மனைவியிடம் தான் அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டுள்ளார். ஆனால் பணம் குறித்த விவரத்தை கீதா சரியாக தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே நேற்று பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கீதா தனக்கு தெரிந்த ஆனைமாவலியைச் சேர்ந்த பிரபாகரன் (27), சிவகங்கை சேதுபதி நகரை சேர்ந்த ஜீவன் (30) ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ்குமார் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், சுரேஷ்குமார் தப்பி ஓடி விட்டார். இதனால் பயந்து போன கீதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கிராமத்தினர் சுரேஷ்குமாரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கீதாவை மதுரை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த மதகுபட்டி போலீசார் கீதா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், ஜீவன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

 

The post கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டதால் மின்சாரம் பாய்ச்சி கணவரை கொல்ல முயன்ற மனைவி: சிவகங்கையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article