கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்: மேயர் பிரியா பேட்டி

6 hours ago 2

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் கந்தல் சேகரிப்பவாளர்களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாம் எம்கேபி.நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. சென்னை மேயர் பிரியா, ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, ஆணையர் குமரகுருபரன், துணை ஆணையர் ரவி கட்டா தேஜா, மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு கலந்துகொண்டனர்.

இதில் கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் கந்தல் மற்றும் குப்பைகளை சேகரிக்கின்றவர்களுக்கு மருத்துவ முகாம், அவர்களுக்கான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு காப்பீடு திட்டம், வேலைவாய்ப்பு முகாம் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் தரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இதில் கலந்துகொண்ட மேயர் பிரியா பேசியதாவது;

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கந்தல் சேகரிப்பாளர்கள் என்று 265 பேர் உள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் அந்த குப்பைமேடு பகுதியை சுற்றி தான் உள்ளது. அப்படியிருக்கக்கூடிய மக்களுக்கு இன்று மாநகராட்சி சார்பில் முகாம் நடைபெற்றது.

முகாமில் கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தோல் நோய்கள், நுரையீரல் பிரச்னை சம்பந்தமாக தீர்வு காணும் பொருட்டு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கந்தல் சேகரிக்கும் நபர்களுக்கு ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் பொருட்டு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. இதற்காக ஐதராபாத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தமுறையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டுவரும் இடங்களை நானும் அதிகாரிகளும் பார்த்துவந்தோம்.

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் சுமார் 30, 40 ஆண்டுகளாக குப்பைகள் உள்ளது. இவை அனைத்தையும் பயோமைனிங் செய்தால் காலதாமதமாகும். எனவே அவற்றை தனித்தனியாக பிரித்து ஒரு பகுதியை மின்சாரம் தயாரிக்கவும் மற்றொரு பகுதியை பயோ மைனிங் தயாரிக்கவும் மற்றொரு பகுதியை கேஸ் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். கோடைகால நோய்களை கண்டறிந்து தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மஞ்சள் காமாலை, தட்டம்மை ஆகிய நோய்கள் எங்காவது இருந்தால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மேயர் கூறினார்.

மணலி மண்டலம் 20வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் உள்ள மயானத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் பூங்கா, நடைபாதை மற்றும் அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க சொட்டு நீர்ப்பாசனத்துடன் 250 மகிழம்பூ மரம் நடும் பணியை சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் துவக்கிவைத்தனர்.

The post கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article