கொடநாடு வழக்கில் விசாரணை நடத்தலாம் என்ற உத்தரவு இலை தலைக்கும் சின்ன மம்மிக்கும் உதறல் ஏற்படுத்தியிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 month ago 8

‘‘இலை கட்சியில் அதிகரிக்கும் கோஷ்டி பூசலால் தொண்டர்கள் புலம்பும் சத்தம் அதிகரித்து வருகிறதாமே எங்கேயாம்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மயில் நடனமாடிய மாவட்டத்தில் இலை கட்சியில் முன்னாள், இன்னாள் பொறுப்பாளர்களுக்கு இடையே பனிப்போர் உச்ச கட்டத்தை தற்போது எட்டி இருக்காம்.. மாவட்டத்தில் கட்சியில் யார் பெரிய ஆள் என்பதை தீர்மானிக்க இருவரும் அவ்வப்போது அவர்களுக்குள் உரசிக்கொள்கின்றனராம்.. இதனால் 2வது கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் அவர்களுக்குள் புலம்புகிறார்களாம்… மாவட்டத்தில் தனது ‘கை’யை உயர்த்துவதற்கான வேலையில் மாஜியான நிர்வாகி திரைமறைவில் காய் நகர்த்தி வருகிறாராம்… மீண்டும் மாவட்ட செயலாளர் பதவியை பிடித்து விடலாம் என்ற முயற்சியில் மேலிடம் வரை சென்று அதற்கான சீக்ரெட் வேலையில் ஈடுபட்டு வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மூன்று மாஜிக்கள் மாவட்ட செயலாளர்களாக இருக்கும் மஞ்சள் மாவட்டத்திலும்கூட இலைக்கட்சியில் மாஜிக்கும், சிட்டிங்கிற்கும் மோதலாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மஞ்சள் மாவட்டத்துல இலை கட்சியில 3 மாஜி அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களாக இருக்காங்க.. சமீபகாலமா 3 பேரும் வெவ்வேறு ரூட்ல பயணிக்கிறாங்களாம்.. இதுல மூத்த மாஜி தன்னை கட்சி கள ஆய்வுக்குழுவில் வாய்ப்பு வழங்கலைன்னு தலைமை மேல அதிருப்தியில் இருக்கிறாராம்.. இதேபோல சோப்பு நுரை புகழ் மாஜியானவர் தன்னோடு ஆதரவாளர்களுக்கு மட்டும் கட்சியில பதவி வாங்கி கொடுக்கிறாராம்.. இதனால கட்சியில கோஷ்டிகள் எண்ணிக்கை அதிகரிச்சுட்டே போகுதாம்.. கடந்த மூன்று நாளைக்கு முன்னாடி அக்கட்சியின் மாஜி பொதுச்செயலாளர் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்திருக்கு.. இதுல திங்களூர் பகுதியில் மாஜி எம்எல்ஏ தலைமையில ஒரு கோஷ்டியும், சிட்டிங் எம்எல்ஏ தலைமையில ஒரு கோஷ்டின்னு இரண்டு கோஷ்டியா வந்து மாலை போட்டிருக்காங்க.. மாஜிக்கும், சிட்டிங்கிற்கும் கடுமையான மோதல் இருக்காம்.. கட்சி இப்ப இருக்கிற நிலைமையில இந்த கோஷ்டி பூசல் எலக்சனில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்னு கட்சிக்காரங்க கவலையில் இருக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மக்கள் முன்னேற்றமே.. மாநிலத்தின் முன்னேற்றம்.. என்ற கொள்கையில் ஒன்றிணைந்துள்ளதாக மார்தட்டுறாங்களாமே புதுச்சேரியில் புது கோஷ்டி..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குட்டி பிரான்ஸ் என்றழைக்கப்படும் புதுமையான சேரியில் அரசியல் எப்போதுமே புது வினோதம்தான். கட்சி மட்டுமின்றி தனிநபர் செல்வாக்குதான் வெற்றிகளை மக்கள் செல்வாக்கு பெற்றவர்களுக்கு கிடைப்பதாக தகவல் உள்ளது. இதனிடையே ஆளுங்கட்சி மீது அதிருப்தியடைந்த மலர் கட்சி ஆட்சி தரப்பைச் சேர்ந்த முக்கியமான மாஜி, அதிமுகவில் தனி கோஷ்டியான முன்னாள் எம்எல்ஏ, அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் முன்னாள் பிரதமர் பெயர் கொண்ட சுயேச்சை ஆகியோர் திடீரென கைகோர்த்து இருக்கிறாங்களாம்.. இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தை அதிர செய்துள்ளதாம்.. இதற்கு ஆளுங்கட்சி சரியில்லை… எதிர்க்கட்சியும் சரியில்லை… என்பதுதான் பிரதான காரணமாம்.. ஊழல் செய்ய ஒருகூட்டம்… மண்டியிட ஒருகூட்டம்… வியாபாரம் செய்ய வினோத கூட்டம் என்ற மோசமான நிலை சேரி அரசியலில் நிலவுவதாக குமுறும் புது கோஷ்டியினர், மக்கள் முன்னேற்றமே… மாநிலத்தின் முன்னேற்றம்… என்ற கொள்கையில் ஒன்றிணைந்துள்ளதாக மார்தட்டுகின்றனர்.. முதல்வரையும் மாத்தணும்… தலைமையையும் மாத்தணும்… என்ற கோரிக்கையை பிரதானமாக முன்வைத்து களமிறங்கி இருப்பதால் ஆளுங்கட்சி மட்டுமின்றி அதிமுக தரப்பும் கதிகலக்கத்தில் இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சின்ன மம்மிக்கும், இலைக்கட்சி தலைவருக்கும் இடையே புதைந்திருக்கும் கொடநாடு பங்களா மர்மம் எப்போது வெளியே வரும் என எதிர்பார்ப்போடு இருக்கிறாங்களாமே கட்சித் தொண்டர்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘இலைக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மறைந்த மம்மிக்கு ரொம்பவுமே பிடித்தமான இடம் கொடநாடு பங்களா தானாம்.. அங்கு போய் அவர் தங்கி, எஸ்டேட்டை பேட்டரி காரில் ஒரு சுற்றுசுற்றி வந்தால் மனதில் இருக்கும் பாரமெல்லாம் பறந்தோடி விடுமாம்.. இதற்காக அவ்வப்போது மம்மி எஸ்டேட்டுக்கு போவாங்களாம்.. அந்த சொகுசு பங்களா அவருக்குதான் என இலைக்கட்சி தொண்டர்கள் எண்ணியிருந்த நேரத்தில், அதில் பெரும்பங்கு சின்ன மம்மியிடம் தான் இருப்பதை தெரிந்துகொண்ட தொண்டர்கள் சற்று அதிர்ச்சியுடன் கலங்கித்தான் போனாங்களாம்.. அதுவும் மம்மி மறைந்த பிறகு, அங்கு நடந்த கொலை, கொள்ளைக்கு அப்புறம்தான் தெரிந்ததாம்.. மம்மிக்கு தோழியாகத்தானே இருந்தாங்க.. அவங்களுக்கு எஸ்டேட்டை வாங்குவதற்கு துட்டு எங்கிருந்து வந்ததுன்னு கேள்வி எழுப்பினாங்க.. அதே நேரத்தில் அந்த பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தபோது சின்ன மம்மி பெங்களூரு சிறையில் நாலாண்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்ததாக நினைத்த நேரத்தில் அவர் ஷாப்பிங் போன வீடியோக்கள் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திச்சாம்..

தண்டனை முடிந்து வெளியே வந்தபோது, பங்களாவில் என்ன பொருட்கள் கொள்ளை போனது என்று அவர் வாயே திறக்கலையாம்.. மாஜிக்களின் சொத்து ஆவணங்கள், தங்க வைடூரியம், கரன்சிகள் நிரம்பியிருந்ததாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. ஆனால் பங்களாவுக்கு சொந்தமான சின்ன மம்மி என்ன திருட்டுப்போச்சின்னு ஏன் பேசலன்னு கேள்விமேல கேள்வியா எழுந்திருக்காம்.. ஆனால் இந்த விவகாரத்தில் சின்ன மம்மிக்கும், இலைக்கட்சி தலைவருக்கும் இடையே மர்மம் புதைந்திருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் கேள்வி எழுப்புறாங்க.. கொடநாடு பங்களாவில் இருந்து ஆவணங்கள் கைமாற்றியதாக பிடிபட்டவர்கள் சொல்றாங்க.. ஆனா என்ன ஆவணம் இருந்ததுன்னு சின்ன மம்மி சொல்ல தயங்குவது ஏன் எனவும், அந்நேரத்தில் முதல்வராக இருந்த இலைக்கட்சி தலைவருக்கும் தெரிந்திருக்கும் எனவும் சந்தேகப்படுறாங்களாம்.. இவர்களை விசாரிப்பதில் எந்ததடையும் இல்லைன்னு கோர்ட் சொல்லியிருக்காம்.. இதன் பிறகாவது உண்மை வெளியே வருமான்னு கட்சி தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா. 

The post கொடநாடு வழக்கில் விசாரணை நடத்தலாம் என்ற உத்தரவு இலை தலைக்கும் சின்ன மம்மிக்கும் உதறல் ஏற்படுத்தியிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article