கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா.. குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் ஆவேச பேச்சு

1 day ago 5

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஜிம் சரப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ் தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அதாவது, நீங்கள் எனக்கு எதிராக எவ்வளவு வேணாலும் வதந்திகள் பரப்பலாம். எதிர்மறையான விஷயங்களை கிளப்பலாம். ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்பு என்னைப்பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க. தம்பிங்களா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா. இங்க இந்த சர்க்கஸ் எல்லாம் வேண்டாம்.

இங்க இருக்குறவங்க என் ரசிகர்கள் கிடையாது, 23 வருஷமா என் கூடவே வந்த வழித்துணைகள். நீங்க சும்மா ஒரு 4 வதந்தியை பரப்பி என்னை காலி பண்ணிடனும்னு நெனச்சா அதை விட முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது" என்று ஆவேசமாக பேசினார்.

மேலும், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார். அதாவது, எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல் தான் வாழ்க்கை. மகிழ்ச்சியா இருங்க. சந்தோஷத்தை வெளிய தேடாதீங்க. அது உங்களுக்கு உள்ளே தான் இருக்கு. நிம்மதி, சந்தோஷத்துக்கு மேல எதுவும் முக்கியம் இல்லை. இவ்வளவு வருஷமா, எல்லாரும் இவ்வளவும் பேசும் போதும், அதைத்தாண்டி எல்லாரும் என்கூட இருக்கீங்க. நான் ரொம்ப கொடுத்து வைச்சு இருக்கணும். நிறைய ஊர்ல இருந்து எல்லாரும் வந்து இருக்கீங்க. வீட்டுக்கு பாதுகாப்பா போங்க. பைக்ல என்னை பின்தொடர வேண்டாம். அதை நான் ஆதரிக்க மாட்டேன். உங்களோட சந்தோஷத்தை விட பாதுகாப்பு தான் முக்கியம்." என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article