கொசுக்களை கொல்லும் ‘ஸ்பாதோடியா’ பூத்துக் குலுங்குது மலேரியா மரங்கள்

2 months ago 9

*மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகள் ரசிப்பு

மூணாறு : கொசுக்களை அழிக்கும் திறன் கொண்ட ‘ஸ்பாதோடியா’ மரங்களில் பறவை வடிவில் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள பூக்கள் மூணாறு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.கேரள மாநிலம், மூணாறை சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களை ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர்கள் நிர்வகித்தபோது, கொசுக்கள் மூலம் பரவிய மலேரியா காய்ச்சலுக்கு தொழிலாளர்கள் ஏராளமானோர் பலியாகினர்.

மலேரியா காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக, கொசுக்களை அழிக்கும் திறன் கொண்ட ‘ஸ்பாதோடியா’ மரக் கன்றுகளை இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து மூணாறை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் நட்டனர். அந்த மரங்களில் பறவை வடிவில் சிவப்பு நிறங்களில் பூக்கும் பூக்கள், கொசுக்களை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டது.

அவ்வாறு ஈர்க்கப்படும் கொசுக்கள், பூக்களில் பசை போன்று சுரக்கும் ஒருவித திரவத்தில் சிக்கி அழிந்துவிடும். கொசுக்கள் அழிக்கப்பட்டதால் அவை ‘மலேரியா மரங்கள்’ எனவும் அழைக்கப்படுகிறது. தற்போது மூணாறு – மறையூர் சாலையில் வாகுவாரை எஸ்டேட் பகுதிகளில் பச்சைப்பசேல் என்று கண்களைக் கவரும் வகையில் காணப்படும் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் உள்ள ஸ்பாதோடியா மரங்களில் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

The post கொசுக்களை கொல்லும் ‘ஸ்பாதோடியா’ பூத்துக் குலுங்குது மலேரியா மரங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article