கைவினைஞர்களை காப்போம்

4 months ago 17

பி றப்பால் அனைவரும் சமம் என திராவிடம் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தாலும், ஒன்றிய அரசின் செவிட்டு செவிகளில் ஒருபோதும் அது விழுவதில்லை. கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கிறோம் என்ற போர்வையில் ஒன்றிய அரசு குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டத்திற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் எதிர்ப்பு நிலவுகிறது. இருப்பினும் ஒன்றிய அரசு மீன்களை பிடிக்க பொரிகளை அள்ளி வீசுவது போல், அத்திட்டத்தில் சலுகைகளை அள்ளி வீசிக் கொண்டே போகிறது.

கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 18 தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு விஸ்வகர்மா அடையாள அட்டை, தங்கள் தொழிலுக்கு தேவையான பொருட்கள் வாங்கிட ரூ.15 ஆயிரம் இ-வவுச்சர், எவ்வித பிணையும் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் என சலுகை பட்டியல் நீள்கிறது. ஆனால் இத்திட்டத்தில் பயன்பெற அவர்களுக்கு அத்தொழில் குலத்தொழிலாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

இத்திட்டத்தில் மேம்போக்கான சலுகைகள் கண்ணை மறைத்தாலும், அதன் பின்னால் பரம்பரை தொழில் என்னும் பசுதோல் போர்த்திய புலியால் ஆபத்துகளும் அதிகம். வரம் தருகிற சாமிகளும், சாதி, மதம் பார்த்து தந்தால், அந்த வரமே சாபமாகிவிடும். எல்ேலாருக்கும் எல்லாம் என்கிற திராவிட சிந்தாந்தம் கொண்ட இம்மண்ணில், இத்திட்டம் செயல்படுத்தப்படாது என தமிழக அரசு விஸ்வகர்மா திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. ஆனாலும் மாநில அரசு கைவினைஞர்களை கைவிட தயாராக இல்லை.

குலத்தொழிலுக்கு மாற்றாக புதியதொரு திட்டத்தை ‘கலைஞர் கைவினை திட்டம்’ என்ற பெயரில் பரிணமிக்க வைக்கிறது. கைவினைஞர்கள் மத்தியில் சாதி ரீதியிலான பாகுபாடு கூடாது என்கிற கருத்தை தமிழக அரசு தொடக்கம் முதலே தெளிவாக முன்வைத்து வருகிறது. தமிழக அரசின் புதிய திட்டத்தின்படி குடும்ப தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினை கலைஞர்கள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையலாம்.

இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்குவதற்கும், நவீன வடிவங்களை அதில் புகுத்தவும் கடன் உதவிகள் வழங்கப்படும். திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படும். கலைஞர் கைவினை திட்டத்தில் 25 சதவீத மானியத்தோடு ரூ.3 லட்சம் கடனுதவி பெறலாம். தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

மர வேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், சிற்ப வேலைபாடுகள், மண்பாண்டங்கள் மற்றும் சுடுமண் வேலைகள், கட்டிட வேலைகள், கயிறு, பாய் பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு சாதி, குலம் பார்க்காமல் தொழில் முனைவோர் என்ற அடிப்படையில் கடன் தரப்படும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிச்சயமாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தப்போகும் இத்திட்டம் நாடு முழுவதுக்குமே ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியாவில் பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு தமிழகமே இப்போது முன்மாதிரியாக இருக்கிறது. அதுபோல் கைவினைஞர்களின் தொழில் மேம்பாட்டிலும் தமிழகம் கண்டிப்பாக தனித்து நிற்கும். நசிந்து போன தொழில்களை ஊக்குவிக்கிறோம் என்ற போர்வையில் குலத்தொழில் முறைகளை படிப்படியாக புகுத்தும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை திட்டங்களை, தமிழக மக்கள் தவிடுபொடியாக்குவர். சமூக நீதி அடிப்படையிலான மாநில அரசின் மகத்தான திட்டத்தை நாம் மலர்தூவி வரவேற்போம்.

The post கைவினைஞர்களை காப்போம் appeared first on Dinakaran.

Read Entire Article