கைவினை திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க சிறப்பு நேர்காணல்: கலெக்டர் வேண்டுகோள்

4 weeks ago 5

திருவள்ளூர்: கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் சிறப்பு நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழில் வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க வகையில் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அவற்றுள் ஒன்று, கலைஞர் கைவினைத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோர் கட்டிட வேலைகள், மரவேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள், நகை செய்தல், சிகையலகாரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், சுதை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள், தையல் வேலை, கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மை தயாரித்தல், படகுக் கட்டுமானம், பாசிமணி வேலைப்பாடுகள், துணி வெளுத்தல், தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்கவும் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் பயன் பெறலாம். மேலும், ரூ.3 லட்சம் வரையிலான பிணையற்ற கடன் உதவியும் தமிழக அரசால் 25 சதவிகிதம் (அதிகபட்சம் 50 ஆயிரம்) வரை மானியம் மற்றும் 5 சதவிகிதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 வயது முதல் 55 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தின் தொழிலார்வம் கொண்டவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு விரும்புகிறது. இத்திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர்.

இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற மாவட்ட தொழில் மையம், காக்களூர் தபால் நிலையம் அருகில், காக்களூர் தொழிற்பேட்டை, திருவள்ளூர் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 044-27666787 ஆகிய எண்களில் தொலைபேசி வழியாகவோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், வரும் 19.12.2024 வியாழன் அன்று காலை 10.30 மணிக்கு இத்திட்டம் தொடர்பாக சிறப்பு நேர்காணல் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மற்றும் வங்கி மேலாளர்கள் தலைமையில் மாவட்ட தொழில் மையம், திருவள்ளூரில் நடைபெற உள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து பங்குகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post கைவினை திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க சிறப்பு நேர்காணல்: கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article