கைவினை கலைஞர்கள் மானியத்துடன் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

2 months ago 14

கட்டிட வேலைகள், மர வேலைப்பாடுகள், ஆபரணங்கள் உற்பத்தி, தோல் கைவினைப் பொருள்கள், காலணிகள் தயாரித்தல், கூடை முடைதல், பாய் பின்னுதல், மண்பாண்டங்கள் தயாரித்தல், பொம்மை தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், இசைக்கருவிகள் தயாரித்தல் உள்ளிட்ட 25 வகையான கைவினைத் தொழில்களை தொடங்க விரும்புகிறவர்கள் மற்றும் விரிவாக்கம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர்: கலைஞர் கைவினைத் திட்டம் மூலம் கைவினைத் தொழில்களை தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு வருமாறு: தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்தும் நோக்கிலும் கலைஞர் கைவினைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குடும்பத் தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 வகையான கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் சமூகநீதி அடிப்படையில் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்கவும், ஏற்கனவே இத்தொழில் செய்வோர் நவீன வடிவில் தொழிலை மேம்படுத்தவும் கடனுதவிகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். கட்டிட வேலைகள், மர வேலைப்பாடுகள், ஆபரணங்கள் உற்பத்தி, தோல் கைவினைப் பொருள்கள், காலணிகள் தயாரித்தல், கூடை முடைதல், பாய் பின்னுதல், மண்பாண்டங்கள் தயாரித்தல், பொம்மை தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், இசைக்கருவிகள் தயாரித்தல் உள்ளிட்ட 25 வகையான கைவினைத் தொழில்களை தொடங்க விரும்புகிறவர்கள் மற்றும் விரிவாக்கம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 35 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படும். பட்டியலிடப்பட்ட அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் மூலமாக கடனுதவி பெற்றத் தர ஆவன செய்யப்படும். தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில் 7 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட்டு 2 சதவீத வட்டி மானியமாக வழங்கப்படும். இதர வங்கிகள் வழங்கும் கடனுதவி வட்டி விகிதத்தில் 5 சதவீதம் வட்டி மானியமாக வழங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் கைவினைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் தொழில் முனைவு மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படும். மேலும், அவர்களது உற்பத்தி பொருள்களுக்கு சந்தை வாய்ப்பும் செய்து தரப்படும். அனைத்து வகை கைவினை கலைஞர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmeonline.tn.gov.in/KKT என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையம் பொது மேலாளரை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கைவினை கலைஞர்கள் மானியத்துடன் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article