கைத்தறி துறை சார்பில் சென்னையில் 'ஒருங்கிணைந்த வளாகம்' - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

1 week ago 3

சென்னை,

சென்னை எழும்பூரில் ரூ.227 கோடி மதிப்பீட்டில் 'ஒருங்கிணைந்த வளாகம்' கட்டப்பட உள்ளது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.1.2025) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகத்திற்கு (Unity Mall) அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், "சென்னையில் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான கண்காட்சி அரங்குகளை உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த வளாகம் ரூ.227 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் 4.54 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களுடன் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இக்கட்டத்தின் அடித்தளம் 1 மற்றும் 2-இல் 323 கார்கள் நிறுத்தும் வசதியும்.

கோ-ஆப்டெக்ஸ் காட்சியறையும், தரைதளம் முதல் இரண்டாம் தளம் வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 கடைகளும், மூன்றாம் தளம் முதல் ஐந்தாம் தளம் வரை 36 இதர மாநில கடைகளும் (One District One Product Shops), ஆறு மற்றும் ஏழாம் தளங்களில் புத்தாக்க மையம் மற்றும் வடிவமைப்பு அச்சுக்கூடமும், எட்டாம் தளத்தில் கோ-ஆப்டெக்ஸ் அலுவலகமும் அமைக்கப்படவுள்ளது.

மேலும், இவ்வளாகத்தில் உணவுக்கூடம், நான்கு மின்தூக்கிகள் மற்றும் இரண்டு தானியங்கி படிக்கட்டுகள், கழிப்பறைகள், தீயணைப்பு வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த வளாகமானது, ஒரு மாவட்டம் ஒரு பொருள் முன்முயற்சியின் கீழ், பொருளாதார வலுவூட்டல் மற்றும் கலாச்சார கொண்டாட்டத்தின் முன்னுதாரணமாக அமையும். இது கைவினைஞர்கள் மற்றும் நுகர்வோருக்கு இடையிலான புரிதலை வலுப்படுத்துவதையும், மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் உள்நாட்டு தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒருங்கிணைந்த வளாகம் உள்ளூர் கைவினைத்திறனை மேம்படுத்துவதற்கும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவின் பலதரப்பட்ட கலாச்சாரங்களின் சான்றாகவும் விளங்கும். இந்த வளாகமானது புவியியல் எல்லைகளைக் கடந்து, உள்ளூர் தயாரிப்புகளுக்கு விரிந்த சந்தையினை வழங்குவதோடு, உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கிய இடமாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை செயலாளர் வே.அமுதவல்லி, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் கலந்துகொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article