கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு மதியம் 12 முதல் 3 மணி வரை கட்டாய ஓய்வு

4 hours ago 1

திருவனந்தபுரம்: கேரளாவில் வெயில் சுட்டெரித்து வருவதை தொடர்ந்து திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மதியம் 12 முதல் 3 மணி வரை ஓய்வு வழங்க கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரளாவில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது சராசரியை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது.

இதனால் கட்டிடத் தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்கள் உள்பட திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மே 10ம் தேதி வரை பணி நேரத்தை மாற்றியமைத்து கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள நேரத்தில் பணி நேரம் 8 மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய ஓய்வு வழங்க வேண்டும்.

ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மதியம் 12 மணியுடன் முடியும் வகையிலும், 3 மணிக்கு தொடங்கும் வகையிலும் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு கேரள தொழிலாளர் நலத்துறை ஆணையர் சப்னா நசருதீன் உத்தரவிட்டுள்ளார். கடல் மட்டத்திற்கு 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சூரியனின் தாக்கம் அதிகம் இல்லாத இடங்களில் இந்த மாற்றங்களை அமல்படுத்த தேவையில்லை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில் தொழிலாளர்களுக்கு மதியம் 12 முதல் 3 மணி வரை கட்டாய ஓய்வு appeared first on Dinakaran.

Read Entire Article