கேரளாவில் கோயில் விழாவில் பயங்கர வெடி விபத்து: 150க்கும் மேற்பட்டோர் காயம்: 7 பேர் கவலைக்கிடம்

3 months ago 11

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே நீலேஸ்வரத்தில் கோயில் விழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியில் அஞ்சூற்றம்பலம் வீரர்க்காவு கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வருடம்தோறும் காளியாட்டத் திருவிழா நடைபெறும். திருவிழாவின் கடைசி நாளில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கமாகும்.

இதற்காக ஏராளமான வெடிபொருட்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தன. இவை கோயிலுக்கு மிக அருகே உள்ள ஒரு குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சாமுண்டி தெய்யம் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். வெடிபொருள் குடோனுக்கு அருகேயும் நின்று கொண்டு ஏராளமானோர் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் வெடிபொருள் குடோனுக்கு அருகே சிலர் பட்டாசுகளை வெடித்து உள்ளனர். இதில் தீப்பொறி வெடிபொருள் குடோனில் விழுந்ததாக கூறப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் குடோனில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறத் தொடங்கின. இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இதனால் பலர் நெரிசலில் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு பலரும் ஓடத்தொடங்கினர். இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் சுமார் 100 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் காசர்கோடு மாவட்ட கலெக்டர் இன்பசேகர், எஸ்பி ஷில்பா உள்பட போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து தொடர்பாக கோயில் நிர்வாகிகள், வெடி பொருள் காண்டிராக்டர் உட்பட 8 பேர் மீது நீலேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளாவில் கோயில் விழாவில் பயங்கர வெடி விபத்து: 150க்கும் மேற்பட்டோர் காயம்: 7 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Read Entire Article