திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே கூகுள் மேப்பை பார்த்து குறுக்கு வழியில் சென்ற நாடகக் குழுவின் பஸ் மலையில் கவிழ்ந்து 2 நடிகைகள் பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம் காயங்குளத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள் உள்பட 14 பேர் அடங்கிய நாடகக் குழுவினர் கண்ணூரில் நாடகம் நடத்துவதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன்பு மினி பஸ்சில் புறப்பட்டு சென்றனர். கடன்னப்பள்ளி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு நாடகத்தை முடித்துவிட்டு வயநாடு மாவட்டம் பத்தேரிக்கு புறப்பட்டனர்.
பத்தேரிக்கு மலைப்பாதையை கடந்து செல்ல வேண்டும். கடந்த சில தினங்களாக இங்கு பலத்த மழை பெய்ததால் வழியில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது. இதனால் குறுக்கு வழியில் செல்வதற்காக குழுவினர் கூகுள் மேப்பின் உதவியை நாடினர். கூகுள் மேப்பைப் பார்த்தபடி நாடகக் குழு மலைப்பாதையில் பத்தேரியை நோக்கி சென்று கொண்டு இருந்தது. இவர்கள் சென்ற வழி மிகவும் குறுகலாக இருந்தது.
இந்தநிலையில் மலையாம்படி என்ற இடத்தில் ஒரு எஸ் வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பஸ் மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து குறித்து அறிந்தவுடன் கண்ணூரில் இருந்து தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கண்ணூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காயங்குளத்தை சேர்ந்த அஞ்சலி(32), கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த ஜெசி மோகன்(48) ஆகிய 2 நடிகைகள் பரிதாபமாக இறந்தனர்.
படுகாயம் அடைந்த நடிகர்கள் உள்பட 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் காயங்குளத்தை சேர்ந்த உமேஷ் என்ற நடிகரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாடகக் குழு சென்ற பாதை மிகவும் குறுகலானது என்றும், வளைவுகள் அதிகமான இந்தப் பாதையில் பெரிய வாகனங்கள் செல்ல முடியாது என்றும் அந்த பகுதியினர் தெரிவித்தனர்.
The post கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்து குறுக்குவழியில் சென்றனர் மலையில் பஸ் கவிழ்ந்து 2 நடிகைகள் பலி: நடிகர்கள் உள்பட 9 பேர் படுகாயம் appeared first on Dinakaran.