
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்திற்கு கேரளா வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. இதனால் சிறப்பு படை போலீசார் அவ்வப்போது எல்லை பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு கஞ்சா கடத்தி வருபவர்களை கண்காணித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று இரவு அருமனை அருகே உள்ள பனச்சமூடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தேவிகோடு ஆயவிளையை சேர்ந்தவர்கள் என்பதும், கேரளாவில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்த கஞ்சாவை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.