கேரளாவில் இன்று அதிகாலை பயங்கரம்; தம்பதியை அடித்து கொன்று வீட்டுக்கு தீ வைப்பு?: மகனிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி

2 hours ago 1

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று அதிகாலை வீட்டுக்குள் இருந்த தம்பதி தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். சொத்து தகராறில் பெற்றோரை அடித்து கொன்றுவிட்டு வீட்டுக்கு மகன் தீ வைத்தாரா என்ற சந்தேகத்தில் அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சென்னித்தலா பகுதியை சேர்ந்தவர் ராகவன் (92). இவரது மனைவி பாரதி (90). இவர்களது மகன் விஜயன். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ராகவன் மற்றும் பாரதியின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன.

அந்த சொத்து முழுவதையும் தனக்கு எழுதித் தருமாறு கூறி பெற்றோரிடம் விஜயன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் தங்களின் காலத்துக்கு பிறகு தருவதாக கூறினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த விஜயன் பெற்றோரை கடுமையாக அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வீட்டுக்குள் தங்களுக்கு நடக்க போகும் கொடூரத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இன்று அதிகாலை 3 மணியளவில் இவர்களது வீட்டில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிவதை அக்கம்பக்கத்தினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ராகவனும், பாரதியும் உடல் கருகி இறந்த நிலையில் காணப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

வழக்கமாக அந்த பெற்றோருடன் வீட்டில் இருக்கும் விஜயன் திடீரென மாயமாகியுள்ளார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. எனவே தகராறு காரணமாக பெற்றோரை அடித்து கொலை செய்து வீட்டுக்கு தீவைத்துவிட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். தலைமறைவான விஜயனை போலீசார் உடனே தேடி கண்டுபிடித்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளாவில் இன்று அதிகாலை பயங்கரம்; தம்பதியை அடித்து கொன்று வீட்டுக்கு தீ வைப்பு?: மகனிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.

Read Entire Article