
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் யூடியூபில் மத சொற்பொழிவு ஆற்றி வருகிறார். மேலும் வீட்டு பிரசவத்துக்கு ஆதரவாக யூடியூபில் பேசி வருமானம் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது மனைவி அஸ்மாவிற்கு முதல் இரண்டு குழந்தைகள் மட்டுமே மருத்துவமனையில் பிறந்திருக்கிறது. கடைசி இரண்டு குழந்தைகளை அவருடைய வீட்டிலயே பெற்றெடுத்திருக்கிறார். தற்போது சிராஜுதீனின் மனைவி அஸ்மா ஐந்தாவது முறையாக கருவுற்றிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அஸ்மா திடீரென பிரசவ வலியால் அலறி இருக்கிறார். இதைக்கண்டு சிறிதும் கவலைப்படாத சிராஜுதீன் மனைவிக்கு வீட்டிலயே பிரசவம் பார்த்துள்ளார். அவர் ஆசைப்பட்டது போலவே ஆண் குழந்தை பிறந்து . ஆனால், குழந்தை பிறந்த பிறகு அஸ்மாவுக்கு திடீரென அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.
அவர் கணவரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கெஞ்சி இருக்கிறார். ஆனால், சிராஜுதின் பிரசவ வலி அப்படி தான் இருக்குமென கூறி மனைவியை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார்.
கிட்டதட்ட மூன்று மணி நேரம் படுக்கையிலயே மூச்சி திணறியபடி கிடந்த அஸ்மா ஒருக்கட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி உயிரிழந்துவிட்டதை பார்த்து அதிர்ந்து போன சிராஜுதீன் நடந்த சம்பவம் எக்காரணத்தை கொண்டும் வெளியே கசிந்துவிட கூடாதென கவனமாக இருந்திருக்கிறார்.
ஆனால் மரணம் குறித்து விசாரித்து வந்த போலீசார் சிராஜுதீனை வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் தான் அவர் உயிரிழந்தார் என தெரியவந்தது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிராஜுதீனை கைது செய்தனர்.