திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே அஞ்சுதம்பலம் வீரராகவ கோவில் காளியாட்ட திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அதைக்காண குழந்தைகள், பெரியோர்கள் என ஏராளமானோர் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து தீப்பொறி பறந்து, அருகில் இருந்த பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் விழுந்துள்ளது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்து சிதறின.
கோவிலுக்கு அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டதால் அங்கு கூடியிருந்த மக்கள் பலரும் விபத்தில் சிக்கினர். இந்த வெடிவிபத்தில் 154 பேர் காயமடைந்துள்ளனர். 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்நிலையில், கேரளா கோவில் பட்டாசு விபத்து செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காசர்கோடு பட்டாசு வெடிவிபத்தால் 154 பேர் காயம் அடைந்த நிலையில், 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்ற செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. அனைத்து காங்கிரஸ் தொழிலாளர்களும் முழு மனதுடன் நிவாரண முயற்சிகளை அணிதிரட்டி ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.