புதுடெல்லி,
உலகம் முழுவதும் கத்தோலிக்க தலைமை குருவாக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு ஆலோசனை கூறவும், கத்தோலிக்க சமய முக்கிய முடிவுகள் எடுப்பதிலும் கார்டினல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். போப் தேர்வில் ஓட்டு போடும் தகுதியும் கார்டினல்களுக்கு உண்டு. பல்வேறு மறை மாவட்டத்திற்கு தலைமையாக கார்டினல் செயல்படுவார். உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கார்டினல்கள் தேர்வு செய்யப்பட்டு போப்பால் நியமனம் செய்யப்படுவர்.
இந்த நிலையில், இந்த கார்டினல் பொறுப்புக்கு இந்தியாவில் இருந்து கேரளாவின் செங்கனாச்சேரியைச் சேர்ந்த மான்சிக்னார் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு விழா வாடிகனில் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் ஜார்ஜ் கூவக்காட் கார்டினலாக நியமிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு பெருமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
"புனித போப் பிரான்சிஸ் அவர்களால் புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இது இந்தியாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கும் விஷயம்! மேதகு ஜார்ஜ் கார்டினல் கூவக்காட் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தீவிர சீடராக மனித குல சேவைக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.