மூணாறு, மே 15: கேரள மாநிலம் மூணாறு, மறையூர், காந்தளூர், வட்டவடை, ராஜாக்காடு, பள்ளிவாசல், பைசன்வாலி, சின்னக்கானல், மாங்குளம், கொன்னத்தடி, வெள்ளத்தூவல் மற்றும் இடமலைகுடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக மூணாறிலிருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடிமாலி தாலுகா அரசு மருத்துவமனையை பெரிதும் நம்பி உள்ளனர்.
இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொன்னத்தடி ஊராட்சியை சேர்ந்த ஷாஜன் (45) என்பவர் சர்க்கரை நோய் தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனை வந்துள்ளார். தொடர்ந்து இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன் தினம் அதிகாலை இவர் தூங்கிக் கொண்டிருந்த போது காலில் ஏதோ கடிப்பது போல் உணர்ந்துள்ளார். சட்டென்று கண்விழித்து பார்க்கையில் இரண்டு எலிகள் கால்களை கடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் ஷாஜன் புகார் தெரிவித்தார். இச்சம்பவம் நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ஷாஜன் தங்கியிருந்த அறையில் ஜன்னல் உடைந்துள்ளதாகவும், இதன் வழியாக எலி வந்திருக்க கூடும் என்றும், உடனடியாக உடைந்த ஜன்னலின் பாகம் மாற்றப்படும் என்றும், அவருக்கு தொடந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
The post கேரள அரசு மருத்துவமனையில் நோயாளியை எலி கடித்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.