கேமரூன் க்ரீன் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா..? - ஸ்டார்க் பதில்

3 months ago 20

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் விலகி உள்ளார். முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் அவர் விலகி உள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் க்ரீன் இல்லாததால் எங்கள் பந்துவீச்சு திட்டங்களில் மாற்றம் இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கூறிடுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, கேமரூன் க்ரீனைப் போன்ற ஆல்ரவுண்டர் அணியில் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பு. இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதபோது அந்த அணி அதற்கேற்றவாறு செயல்பட வேண்டிய நிலைக்கு ஆளானது. ஆல்ரவுண்டர் ஒருவர் அணியில் இடம்பெற முடியாத சூழலில் அணியில் கூடுதல் பந்துவீச்சு தேர்வுகள் இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை. கேமரூன் க்ரீன் இல்லாததால் எங்கள் பந்துவீச்சு திட்டங்களில் மாற்றம் இருக்கும். மிட்செல் மார்ஷ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்ற ஆலோசனை சென்று கொண்டிருக்கிறது. அவர் பந்துவீச்சிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆஸ்திரேலியாவில் விளையாடுவது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. கடந்த காலங்களில் அணியில் ஆல்ரவுண்டர் வீரர் இல்லாமலே விளையாடியுள்ளோம். பந்துவீச்சாளர்கள் சிறிது அதிகமான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். நாதன் லயன் சிறிது அதிகமான ஓவர்களை வீச வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article