
அகமதாபாத்,
ஐ.பி.எல் தொடரின் 18-வது சீசன் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளது. இதன் தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது. இந்த சீசனில் குஜராத் அணி சுப்மன் கில் தலைமையில் களம் இறங்குகிறது.
இந்நிலையில் கேப்டன் பொறுப்பையும், பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கேப்டன் பொறுப்பையும், பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.
பேட்டராக ஆக வேண்டும் என நான் எடுத்த முடிவு சிறந்ததென நினைக்கிறேன். பீல்டிங், அல்லது களத்துக்கு வெளியே இருக்கும்போது கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பேன். அதிகமான பேட்டிங் செய்வது எனக்கு நல்லதாக இருக்கிறது. கேப்டனாக இருப்பதின் சுவாரசியமான, சவாலான விஷயம் என்னவென்றால் தினமும் நீங்கள் ஒரு வீரரைப் பற்றி அல்லது உங்களைப் பற்றி புதியதாகக் கற்றுக் கொள்ளலாம்.
நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும். நெஹ்ராவிடம் இருந்து எனக்கு கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் மிகவும் பொக்கிஷமானது. எங்களது சொந்த மைதானம் மிகவும் உதவியாகவே இருக்கிறது. வெளி இடங்களில் நன்றாக விளையாட வேண்டியுள்ளது. கடைசி சீசன் திட்டமிட்டபடி செல்லவில்லை. ஆனால், அதற்காக வித்தியாசமாக எதுவும் செய்ய தோன்றவில்லை.
கடைசி 3 ஆண்டுகளில் எங்களுக்குதான் அதிகமான வெற்றி விகிதம் இருக்கின்றன. அதையே கடைப்பிடித்தால் போதுமானது. இந்த சீசனும் நன்றாகவே செல்லும். சூழ்நிலை சரியாக இருந்தால் 240, 250 அல்லது 260 ரன்கள் அடிக்கலாம். அதற்கு மேல் அடிப்போமா தெரியாது. ஆனால், சில விக்கெட்டுகளில் 150 அல்லது 160 போதுமானதாக இருக்கலாம். சூழ்நிலைக்கு தகவமைப்பதுதான் சிறந்த அணிக்கான தகுதி. இவ்வாறு அவர் கூறினார்.