
சென்னை,
சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. சுந்தர்.சி வடிவேலு இதுவரை மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வின்னர் படத்தின் கைப்புள்ள, தலைநகரம் படத்தின் நாய் சேகர், நகரம் மறுப்பக்கம் படத்தின் ஸ்டைல் பாண்டி கதாபாத்திரங்கள் என்றென்றும் ரசிக்க கூடியவை.
இதற்கிடையில் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. அதாவது, சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு 'கேங்கர்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலு மற்றும் சுந்தர். சி-யுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் லேடி கெட்டப்பிலும் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. இப்படம் வருகிற 24ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'குப்பன் தொல்லை தாங்கலையே..இவன் நாளு நாளா தூங்கலையே..' என்ற பாடல் வெளியாகியுள்ளது. சி.சத்யா இசையில் பா.விஜய் இப்பாடலை எழுதியுள்ளார்.