திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் சிறந்த கல்வி, ஒழுக்கம் கடைபிடிக்கும் மாணவர்களை தேர்வு செய்து உல்லாஸ் அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் முகுந்தைய்யா, கோவிந்தராஜூலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் நரசிம்மன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உல்லாஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிறந்த மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி, ஒழுக்கத்தை அளவு கோலாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.
The post கே.ஜி.கண்டிகை அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை appeared first on Dinakaran.