பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குமரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கே.ஆர்.கண்டிகை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரேஷன் கடை இல்லாததால், இப்பகுதி மக்கள் சுமார் 3 கிமீ தூரம் நடந்து குமரப்பேட்டைக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர். இதுகுறித்து, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனிடம் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, கே.ஆர்.கண்டிகை பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேஷ் பாபு தலைமை தாங்கினார். ஆரணி கூட்டுறவு வங்கி செயலர் பாஸ்கர், துணைத் தலைவர் நாகபூஷணம் மற்றும் பாலு விவேகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் அமுதா ராமு அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி கலந்துகொண்டு பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து பொது மக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்தார். நிகழ்ச்சியில், கிராம பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ஷோபன் பாபு நன்றி தெரிவித்தார்.
The post கே.ஆர்.கண்டிகையில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.