கெய்க்வாட்டுக்கு பதிலாக அந்த வீரரை ஏன் அணியில் சேர்க்க கூடாது..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி

1 week ago 2

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட் விலகி விட்டதால் அவருக்கு பதிலாக ராகுல் திரிபாதி சேர்க்கப்பட்டார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரின் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 104 ரன் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுனில் நரைன் 44 ரன்கள் அடித்தார்.

தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி கண்டிருந்த சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இதனால் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் அந்த அணியை பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக பிரித்வி ஷா போன்ற வீரர்களை சென்னை முயற்சித்தால் என்ன? என்று இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்ரீகாந்த், "சிஎஸ்கேவின் மோசமான தோல்விகளில் ஒன்று. பவர்பிளே பேட்டிங் ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஒத்திகை போல இருந்தது. முழு அணியும் ஏதோ ஏக்கத்தில் ஓடுவது போல் உணர்கிறது. சென்னை அணி மாற்றத்தை குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் பிரித்வி ஷா போன்ற விற்கப்படாத வீரர்களை ஏன் முயற்சி செய்யக்கூடாது? நீங்கள் அதை முயற்சிப்பீர்களா? குழப்பம் கூட ஒரு உத்தியா?" என்று பதிவிட்டுள்ளார்.


Read Entire Article