டெல்லி,
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரசாரத்திற்கு சென்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பயணித்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் பயணித்த கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லி தொகுதி பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
அதவேளை, ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டை பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா மறுத்துள்ளார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் பயணித்த கார் மோதி பாஜகவினர் 2 பேர் காயமடைந்துள்ளதாக பர்வேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.