கெங்கவல்லி அருகே கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்: 7 கேமரா பொருத்தி கண்காணிப்பு

3 months ago 21


கெங்கவல்லி: பச்சமலை ஊராட்சி கீழ்பாலத்தாங்கரை குக்கிராமத்தில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய 7கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவள்ளி அருகே பச்சமலை ஊராட்சி கீழ் பாலத்தாங்கரை பகுதியில் மலை அடிவாரத்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊருக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த வராம் நான்கு கன்று குட்டிகளை சிறுத்தை அடித்து இழுத்து சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் கிராமமே பீதிக்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்த உடன் ஆத்தூர் கோட்ட வன அலுவலர் சேவியர் ஆரோக்கியராஜ் தலைமையில், குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

முதலில் இரண்டு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கேமரா பதிவை எடுத்து பார்த்த போது, சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை. இதையடுத்து, மேட்டூர் அருகில் கொளத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்புக்காக பயன்படுத்திய, 5 அதிநவீன கேமராக்களை நேற்று மூன்று இடங்களில் பொருத்தியுள்ளனர். மேலும் நேற்று வனச் சரகர் சிவக்குமார், உத்திரசாமி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வனச்சரகர் அருண்குமார், சரவணன் கொண்ட குழுவினர் இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது கீழ் பாலத்தாங்கரை சுற்று பகுதிகளில் மொத்தம் ஏழு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக, கெங்கவள்ளி வன சரகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பச்சமலை ஊராட்சி தலைவர் சின்னமணி பிரேம்குமார் மற்றும் வனத்துறையினர் கிராம பகுதிக்கு நேரில் சென்று, குழந்தைகளையும், கால்நடைகளையும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளவும், இரவு நேரங்களில் தனியாக வெளியே வர வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post கெங்கவல்லி அருகே கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்: 7 கேமரா பொருத்தி கண்காணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article