*அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி : கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழாவில் திருநங்கைகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதர வேண்டும் என ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறவுள்ள சித்திரை பெருவிழா உற்சவம் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா உற்சவம் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். இத்திருவிழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
காவல்துறையின் சார்பாக திருவிழா நடைபெறும் இடங்களில் தேவையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் திருவிழாவிற்கு வாகனங்கள் வந்து செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும், பொதுமக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தேவையான உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சியின் சார்பில் திருநங்கைகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, மருத்துவ வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் திருவிழா நடைபெறும் இடத்தில் ஏற்படுத்தி தந்திடவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும் திருவிழா நடைபெறும் நாட்களில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தந்திடவும் அறிவுறுத்தப்பட்டது. திருவிழா நடைபெறும் இடத்தில் தீயணைப்பு துறையின் சார்பில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைத்திடவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூத்தாண்டவர் கோயில் சித்தரை பெருவிழா எவ்வித இடையூறுமின்றி சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, திருக்கோவிலூர் துணை ஆட்சியர் ஆனந்த்குமார்சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா திருநங்கைகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதர வேண்டும் appeared first on Dinakaran.